பாலாறு அணை : உச்ச நீதிமன்றம் விரைந்து விசாரிக்க தமிழகம் மனு
ஞாயிறு, 25 நவம்பர் 2007 (15:43 IST)
பாலாற்றின் குறுக்கே ஆந்திரப் பிரதேசம் அணை கட்டுவது தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழகம் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு கடந்த வாரமே தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக பொதுப் பணித் துறை அமைச்சர் துறைமுருகன் தெரிவித்தார்.
அந்த மனுவில், பாலாற்றின் குறுக்கே அணைக் கட்டப்பட்டால், பாலாற்று நீரை நம்பியுள்ள தமிழகத்தின் வட மாநில விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். மேலும் சென்னை குடிநீர் தேவையை சமாளிப்பதும் கடினமாகிவிடும்.
ஆந்திர மாநிலம், பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து தமிழகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் ஆந்திர மாநிலம் வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அணை கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்ட திட்டமிட்டுள்ளது. எனவே அதற்கு முன்னரே இந்த வழக்கை விரைந்து விசாரித்து அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி சென்று தான் மூத்த வழக்கறிஞர்களை சந்தித்து, இந்த வழக்கின் தீவிரம் குறித்து எடுத்துரைத்து விரைந்து விசாரிக்கக் கோருமாறு கூறியுள்ளதாகவும், அணை கட்டுவதன் மீது தடை வாங்கப்படும் என்று நம்பிக்கையிருப்பதாகவும் அவர் கூறினார்.