இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தந்தை பெரியார் கண்ட அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில், ஈரோடு நகராட்சியை விரிவுபடுத்த வேண்டுமென்று பெரியார் விரும்பியதற்கேற்ப ஈரோடு நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படுமென முதலமைச்சர் கருணாநிதி 15.9.2007 அன்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி ஈரோடு நகராட்சி அதன் தற்போதைய எல்லைகளில் எவ்வித மாற்றமுமின்றி 1.1.2008 முதல் ஈரோடு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படுகிறது. ஈரோடு நகராட்சியின் தற்போதைய பகுதி அப்படியே மாநகராட்சியாக அமைக்கப்பட்டாலும், தந்தை பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற வகையில் பெரிய சேமூர், வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப்பகுதிகளும், பி.பெ.அக்ரஹாரம், சூரியம் பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும், திண்டல், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, முத்தம் பாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளும் ஈரோடு மாநக ராட்சியுடன் இணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு விரிவுபடுத்தப்பட உள்ள மாநகராட்சிப் பகுதிக்கான வார்டுகள் அமைத்தல், மண்டலங்கள் பிரித்தல் போன்ற பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் இந்த விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சி செயல்படத் தொடங்கும்.
ஆசிய அளவில் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் நகரம் முன்னணி இடத்தை வகிக்கின்றது. இந்நகரின் பிரமிக்கத்தக்க தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் செம்மையான முறையில் அளிக்கும் வகையில் திருப்பூர் நகராட்சி மாநகராட்சியாக அமைக்கப்படுகிறது.
ஈரோடு போன்று திருப்பூர் நகராட்சியும் தற்போதைய எல்லைகளுடன் 1.1.2008 முதல் மாநகராட்சியாக அமைக்கப்படுகிறது. 15 வேலம்பாளையம், நல்லூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், செட்டிபாளையம், மண்ணரை, தொட்டிபாளையம், ஆண்டி பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், நெருப்பெரிச்சல், முத்தனம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிப் பகுதிகளும் திருப்பூர் மாந கராட்சியுடன் இணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு விரிவுபடுத்தப்பட உள்ள மாநகராட்சிப் பகுதிக்கான வார்டுகள் அமைத்தல், மண்டலங்கள் பிரித்தல் போன்ற பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் இந்த விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சி செயல்படத் தொடங்கும்.
ஈரோடு, திருப்பூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்துவ தற்கெனத்தனித்தனியாக இரண்டு அவசரச் சட்டங்கள் இன்று பிறக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம் ஆகிய மாநகராட்சிகளுடன் திருப்பூர், ஈரோடு சேர்ந்துள்ளதால் மாநகராட்சி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.