''தமிழக அரசின் மின் வாரியத்தில் பணிக்கு சேர்வதற்கான வயது வரம்பை 40ஆக உயர்த்த வேண்டும்'' என்று பா.ஜ.க மாநில தலைவர் இல.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் மின் வாரியம் 5,000 தொழிற்கல்வி படித்தவர்களை தேர்வு செய்ய உள்ளதாகத் தெரிகிறது. கடந்த 22 வருடங்களாக தொழிற்கல்வி (ஐடிஐ) படித்தவர்களை தேர்வு செய்யாத நிலையில், அந்தப் படிப்பு முடித்து ஏராளமானோர் வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
1991ஆம் ஆண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பிறகு மின் வாரியத்தில் ஒரு வருடம் பயிற்சியாளராக பயிற்சி முடித்து தொடர்ந்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்து வருபவர்கள் வயது 35ஐ தாண்டியவர்கள். இந்த நிலையில் மின்வாரியம் வயது வரம்பு 35 என முடிவு செய்திருப்பது பொருத்தமற்றது.
போக்குவரத்து துறையில் வயது வரம்பு 37 ஆக உள்ளது. மின் வாரியத்தில் மட்டும் 35 என்பது ஏன்? வேலை வாய்ப்பினை தேடி இருப்பவர்கள் பெருவாரியானவர்கள் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். எனவே மின்வாரியத்தில் வயது வரம்பை 40 என உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டுகிறேன் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.