காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீதான தாக்குதல் திட்டமிட்ட சதி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாற்றியுள்ளார்.
மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணசாமியை, மத்திய அமைச்சர் இளங்கோவன் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாகவே சட்டம்-ஒழுங்கு முழுமையாக கெட்டுவிட்டது. காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை மட்டும் குறி வைத்து தற்போது தாக்குதல் நடந்துள்ளது. இதைப் பார்க்கும் திட்டமிட்ட சதிச் செயலாக இது இருக்கும் என சந்தேகம் ஏற்படுகிறது.
தமிழகத்தில் வெடிகுண்டுக் கலாச்சாரம் வளர்ந்து விட்டது. விரும்பத்தகாத பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையை கட்டுப்படுத்தி ஒடுக்க வேண்டியது தி.மு.க. அரசின் கடமையாகும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளது, அவரது சொந்தக் கருத்து.
போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதியில் கிருஷ்ணசாமியின் வாகனம் சென்றதால்தான் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டதாக முதல்வர் கூறியுள்ளார். தமிழகத்தில் எந்தப் பகுதியும் தடை செய்யப்பட்ட பகுதி அல்ல. அரசியல் தலைவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமையாகும்.
இதுபோல அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது, தீய சக்திகளுக்கு ஆதரவு கொடுப்பது போலாகி விடும். இது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் மாறி விடும். காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டும் என்று இளங்கோவன் கூறினார்.