செ‌ன்னை‌க்கு ஓராண்டிற்கு குடிநீர் பஞ்சம் வராது!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (12:26 IST)
தொட‌ர் மழை காரணமாக செ‌ன்னையை சு‌ற்‌றியு‌ள்ள ஏ‌ரிக‌ளி‌ல் ‌திரு‌ப்‌தி தரு‌ம் வகை‌யி‌ல் த‌ண்‌‌ணீ‌ர் அதிகரித்து உ‌ள்ளதா‌ல் செ‌ன்னை‌யி‌ல் ஓரா‌ண்டிற்க்கு குடி‌நீ‌ர் ப‌ஞ்ச‌ம் வராது எ‌ன்று செ‌ன்னை குடி‌நீ‌ர் வழ‌ங்க‌ல் வாரியத்தின் தலைமை பொ‌றியாள‌ர் ‌சிவகுமர‌ன் கூ‌றினா‌ர்.

ம‌க்க‌ள் தொகை நெருக்கடி நிறைந்த சென்னை மாநகரத்திற்கு தினமும் 64.50 கோடி லிட்டர் குடி தண்ணீர் ‌வி‌நியோ‌கி‌க்க‌ப்ப‌ட்டு வருகிறது. இதில்,30 கோடி லிட்டர் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு‌ம், 30 கோடி லிட்டர் தண்ணீர் சென்னை அருகே உள்ள சுற்றுப்புற பகுதிகளுக்கு அளிக்கப்படுகிறது. சமீப‌த்‌‌தி‌‌ல் பெய்த தொடர் மழையால் செ‌ன்னையை சு‌ற்‌றியு‌ள்ள ஏரிகளில் ‌நீ‌ர் ம‌ட்ட‌ம் உய‌‌ர்‌ந்து‌ள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வழங்கல் துறை தலைமை பொ‌றியாள‌ர் சிவகுமரன் கூறுகை‌யி‌ல், தொடர் மழையால் பூண்டி, சோழவரம், செ‌ங்கு‌ன்ற‌ம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் மிக திருப்தி தரும் அளவுக்கு நிரம்பி உள்ளன. பெரும்பாலான ஏரிகள் 75 ‌விழு‌க்காடு நிரம்பி விட்டன. வீராணம், தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பான கண்டலேறு அணையிலிருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது. இது தவிர மழை நீர் சேகரிப்பு திட்டமும் வெகுவாக கை கொடுத்துள்ளது.

இப்போதைய நிலையில் வரும் 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை தாராளமாக தினமும் குறிப்பிட்டபடி குடிதண்ணீர் வழங்கலாம். குடிநீர் பஞ்சத்திற்கு வாய்ப்பில்லை. எனவே சென்னை குடியிருப்பு வாசிகள் ஓராண்டுக்கு குடிதண்ணீர் பற்றி கவலை‌ப்பட தேவையில்லை எ‌‌ன்று பொ‌றியாள‌ர் ‌சிவகுமர‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்