நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த மே மாதம் கடைசியில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீலகிரி, ஊட்டி கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.
ஊட்டியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் ஊட்டியில் 50 மி.மீ. மழையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
இந்த தொடர் மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் குன்னூர்-பர்லியார் தேசிய நெடுஞ்சாலை, குன்னூர், மஞ்சூர் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு இதேபோல் தொடர் மழை பெய்ததால் பர்லியார் பகுதியில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த சாலையை சீரமைக்க ஒரு மாதமாகியது. அதே போல் இந்த ஆண்டும் தொடர் மழையால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என கருதுகின்றனர்.
எனவே நீலகிரி மாவட்ட நிர்வாகம் வட கிழக்கு பருவமழை மூலம் பாதிப்புகள் ஏற்பட்டால் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது.