யானையை கொன்று தந்தம் திருடிய இருவர் கைது

Webdunia

திங்கள், 15 அக்டோபர் 2007 (14:40 IST)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானையை கொன்று தந்தம் திருடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலை பகுதி உள்ளது. இப்பகுதியில் யானைகள் அதிகம்.

கடந்த மாதம், காடகநல்லி வனப்பகுதியில் ஒரு ஆண் யானை கொடூரமாக கொல்லப்பட்டு அதன் தந்தம் திருடப்பட்டது.

இது குறித்து ஈரோடு மண்டல வன பாதுகாவலர் துரைராசு உத்தரவின்படி, சத்தி மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் தலைமையில், சத்தி ரேஞ்சர் சுந்தரராஜன் உட்பட குழுவினர் திருட்டு கும்பலை தேடிவந்தனர்.

யானையை கொன்று தந்தம் திருடியதாக கடம்பூர் மலை பகுதியில் உள்ள பெரியபாளையத்தை சேர்ந்த மாதேவன் (45), அவரது தம்பி குரு (35) ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இருவரும் கோபி, இரண்டாவது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்