இந்தியாவில் உள்ள வழி பாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதை உளவுத்துறையினர் கடந்த வாரம் எச்சரித்திருந்தனர். இதையடுத்து அனைத்து வழிபாட்டுத்தலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி அஜ்மீரில் உள்ள தர்காவில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நடத்தினார்கள். இந்த சம்பவம் அறிந்ததும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் உடனடியாக கூடி ஆலோசித்தனர். மத்திய உளவுத்துறையிடமும் கருத்து கேட்கப்பட்டது. அப்போது தீவிரவாதிகள் மேலும் சில வழிபாட்டுத் தலங்ககளில் தாக்குதல் நடத்த இருப்பதாக எச்சரித்தனர்
இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியது. அதன் பேரில் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு வாகன சோதனை தீவிரமாக நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் மசூதிகள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மசூதிக்கு வரும் அனை வரிடமும் காவல்துறையினர் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர். மசூதிகள் அருகே கூடிநின்று பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தொழுகை இடங்களில் காவலர்கள் இன்று முதல் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியை மேற் கொண்டுள்ளனர். ரம்ஜான் பண்டிகையை நெருங்கி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நவராத்திரி திருவிழா தற்போது நடந்து வருவதால் இந்து கோவில்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் முக்கிய கோவில்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.