சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அறிமுகப் படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை ஒரு வார காலத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மாநில செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறினார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மின்னணு நிர்வாக திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் மின்னணு நிர்வாக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் மூலம் தாக்கல் செய்வதுடன், அது குறித்த விவரங்களையும் இணையதளம் மூலமே தெரிந்துகொள்ள முடியும் என்றார் அமைச்சர் பரிதி இளம்வழுதி,.
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இன்னும் ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மக்களின் நீண்டகால கோரிக்கையான மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.