பொள்ளாச்சி- கிணத்துக்கடவு பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளதால் மதுரை கோட்டத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு கூறினார்.
வரும் 1ஆம் தேதி நடைபெறும் சேலம் ரெயில்வே கோட்ட தொடக்கவிழா தொடர்பாக ஆய்வு செய்ய சேலம் வந்த மத்திய ரெயில்வே இணை மந்திரி வேலு, செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் ரெயில்வே கோட்டம் தொடங்கும் விழா வரும் 1ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும். விழாவுக்கு மத்திய ரெயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் தலைமை தாங்குகிறார். முதலமைச்சர் கருணாநிதி ரெயில்வே கோட்டத்தை தொடங்கி வைக்கிறார். சோனியா காந்தி வருவது உறுதி செய்யப்படவில்லை என்று வேலு தெரிவித்தார்.
பொள்ளாச்சி - கிணத்துக்கடவு பகுதிகளை மதுரை கோட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என்றும் பாலக்காடு கோட்டத்தில் சேர்க்கக்கூடாது என்றும் கூறி வைகோ போராட்டம் நடத்தி வருகிறாரே என்று கேட்டதற்கு, மதுரை கோட்டத்தில் ஏற்கனவே 1460 கி.மீ. தூர ரெயில் பாதை உள்ளது. அதில் இருந்து 79 கி.மீ. தூரம் தான் பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மதுரை கோட்டத்திற்கு எந்த பாதிப்பும் வராது. எந்தச்சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் லாபமாக இருந்தாலும், நஷ்டமாக இருந்தாலும் அது ரெயில்வே துறைக்குதான். பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
கோட்டம் ஆரம்பித்தவுடன் சேலத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் கூறுகையில், தேவைப்பட்டால் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.