ராமர் கால்வாய் திட்டம் என்ற பெயரை வேண்டாம் என்று கூறப்போவதில்லை என்ற கருணாநிதியின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணம் இந்துக்கள் மீதுள்ள கரிசனம் அல்ல. அரசியல் ஆட்சி ஆசனம்தான் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம.கோபாலன் கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தன்னை ஒரு நடுநிலைவாதியாக காட்டிக் கொள்ள அரும்பாடுபட்டிருக்கிறார். 25 ஆண்டுகாலமாக ஓடாமலிருந்த திருவாரூர் ஆழித்தேரை தன் ஆட்சியில்தான் ஓட்டியதாக மார்தட்டிக் கொள்கிறார். அப்படி ஆனால் இவருக்கு முன் அண்ணாதுரை, பக்தவத்சலம், காமராஜர், ராஜாஜி, குமாரசாமி ராஜா ஆகியோரெல்லாம் தேரை ஓட்டவில்லை என்கிறாரா? என்று ராமகோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1493 கோவில்களில் திருப்பணி நிறைவு பெற்று குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளதாக சுயபுராணம் பாடுகிறார். ஆனால், பெரும்பாலான கோவில்களின் திருப்பணிகளில் பக்தர்களே பணம் செலவழித்து உள்ளார்கள். மேலும், 106 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 253 முக்கிய கோவில்களில் திருப்பணி நடைபெறுவதாக சொல்கிறார். இந்த எல்லா திருப்பணிகளுமே பக்தர்களின் நிதியால் தான் நடைபெற்றதே தவிர அரசாங்க கஜானாவிலிருந்து பணம் எடுத்து கொடுத்துவிடவில்லை என ராம கோபாலன் தெரிவித்துள்ளார்.
ராமரே இல்லை; ராமாயணமே நடக்கவில்லை; என்ன ஆதாரம் இருக்கிறது என்றெல்லாம் பேசிவிட்டு, "ராமர் கால்வாய் திட்டம்' என்ற பெயரை வேண்டாம் என்று கூறப்போவதில்லை என்று கருணாநிதி சொல்கிறார். சேது சமுத்திரத் திட்டத்தை விரைவு படுத்த வேண்டியது இவர் அங்கம் வகிக்கும் மத்திய அரசு தானே. திட்டத்தை விரைவுப்படுத்தாவிட்டால் தி.மு.க. அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அரசுக்கு காலக்கெடு வைக்க வேண்டியது தானே என்று ராம கோபாலன் வினா எழுப்பியுள்ளார்.
கருணாநிதியின் திடீர் மாற்றத்திற்கு காரணம் இந்துக்கள் மீதுள்ள கரிசனம் அல்ல. அரசியல் ஆட்சி ஆசனம் தான். தேர்தல் வரப்போகிறது. என்னவெல்லாம் நடக்கபோகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என ராம கோபாலன் சவால் விடுத்துள்ளார்.