தேசிய அளவில் அக்.30ல் அரசு ஊழியர் வேலை நிறுத்தம்

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (11:55 IST)
ஓய்வூதியம் தனியார் மயம், ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்வதை எதிர்த்து அக்டோபர் 30ம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக ஈரோட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொது செயலாளர் முத்துசுந்தரம், தலைவர் ராஜ்குமார், மகளிர் துணைக்குழு தமிழ்செல்வி ஆகியோர் கூறினர்.

அவர்கள் மேலும் கூறியதாவது, அரசு ஊழியர் மாநில மாநாடு மே 18ம் தேதி நடந்தது. மாநாட்டில் பெண் ஊழியர்களிடம் பாலியல் சீண்டல், துன்புறுத்துதல் போன்ற பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க மாவட்ட ஆணையம் அமைப்பதாக அரசு ஆணை வெளியிட்டது. அரசாணை பெயரளவில் தான் உள்ளது. அதன்படி குழு அமைக்க வேண்டும். தொழிற்சங்க தலைவர்கள், அரசு அலுவலர்கள் சங்க தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் குழுவில் இடம்பெறவேண்டும்.

தமிழகத்தில் மாவட்டம் தோறும் இக்குழுவை அமைக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் உயர்மட்டத்தில் பெண்கள் அதிகம் இல்லை. கிளார்க் போன்ற பணிகளில் தான் அதிகம் உள்ளனர். தமிழகத்தில் 1.80 பணியிடங்கள் காலியாக உள்ளன. மூன்று பேர் பணிபுரிவேண்டிய இடத்தில் அந்த பணியை ஒருவர் செய்ய வேண்டிய நிலை உள்ளது. விடுமுறை நாட்களிலும் பெண்கள் பணிக்கு செல்ல வேண்டியதுள்ளது. 40வயதை கடந்த பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அரசு உடனடியாக காலியான பணியிடங்களை நிரப்ப வேண்டும். பெண் ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்ட நிலையில் உள்ளது.

சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஆட்குறைப்பு நடவடிக்கை என்ற பெயரில் பதவியுயர்வுக்கு வழியில்லாமல் ஒரே பணியில் 30 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்து மன சோர்வு ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்கு வெள்ளி கிழமைகளில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும். பெண்களுக்கு கணவர் பணிபுரியும் இடங்களில் இடமாறுதல் சலுகை வழங்குவதில்லை. செவிலியர்களுக்கு அடிப்படை பதிவேடு இல்லை. அவர்களுக்கு பயணப்படி வழங்குவதில்லை. அவர்கள் பெறும் ஊதியத்திலிருந்து செலவு செய்ய வேண்டியதுள்ளது.

ஊட்டச்சத்து களப்பணியாளர்களிடம் பாலின பாகுபாடு அதிகம் நிலவுகிறது. பெரியார் கொள்ளைகளை உடைய இயக்கங்கள் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகின்றன. இருப்பினும் பெண்கள் மீதான துன்புறுத்தல், பாலின பாகுபாடுகள் குறைய வழியில்லை.

அரசு அலுவலகங்களில் கணினி பயன்படுத்தும் முறை குறித்து சரியான பயிற்சியளிக்கவில்லை. இதனால் மன அழுத்தம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பணியிட மாறுதல் ஆரோக்கியமானதாக இல்லை.

அரசு தனது ஆணையே முறையாக பின்பற்றவில்லை. அதிகாரிகள் பெண் ஊழியர்களை ஒருமையில் பேசுவதுடன், நிற்க வைத்தே பேசுகின்றனர். இதனால் நாமக்கல்லில் ஒரு பெண் ஊழியர் பலியானார். பெண் ஊழியர்களுக்கு குழந்தை காப்பகம், போக்குவரத்து வசதியில்லை. அலுவலகங்களில் தனியாக ஓய்வு அறை இல்லை. 6 மாதம் ஒரு முறை அரசு பெண் ஊழியர்களுக்கான குழுவை அழைத்து பேச வேண்டும்.

சத்துணவு திட்டத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்த பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. கோவையில் காவல்துறையில் பணிபுரிந்த நாய்க்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் சத்துணவு, அங்கன்வாடி போன்ற பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

அரசு ஓய்வூதியத் திட்டத்தை தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறது. தனியார் மயமாக்க நினைப்பதை கைவிட வேண்டும். கான்ட்ராக்ட் அடிப்படையில் பணி நியமனம் செய்வதை நீக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி அக்டோபர் 30ம் தேதி சென்னையில் அகில இந்திய அளவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

இந்த நிலையில் போரட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என அரசு தற்காலிக இளநிலை உதவியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் நவமணி விடுத்துள்ள அறிக்கையில், அரசு பணியாளர்கள் 2003ல் நடத்திய போராட்டத்தின்போது நியமனம் செய்யப்பட்ட தற்காலிக இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய, அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்பு தேர்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில், தேர்வாணைய தலைவர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளரையும் சந்தித்து விரைவாக தேர்வு நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக ஒரு சிலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஒற்றுமையை சீர்குலைக்கவும், தேர்வு நடத்துவதற்கு தடை ஏற்படுத்த முயற்சிக்கும் அவர்களின் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம். அந்த போராட்டத்துக்கும் நமது சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்