''இடது சாரிகள் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை எப்போது வாபஸ் வாங்கலாம் என்று நேரம் பார்த்து வருகிறார்கள்'' என்று வைகோ கூறினார்.
முழு அடைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்ட போது, வழக்கின் முக்கியத்துவத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை விசாரித்து முழு அடைப்பு நடத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியது. இது உச்ச நீதிமன்றம் பொது மக்களின் நலனை பாதுகாக்க எடுத்த நல்ல முடிவு என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சேது சமுத்திர திட்டம் அண்ணா கனவு திட்டம் தான். தமிழகத்தின் தேவையை நிறைவேற்றும் திட்டம் தான். அண்ணா கனவு திட்டமான சேது சமுத்திர திட்டம் பற்றி எந்த பிரதமரிடமாவது கோரிக்கை மனு கொடுத்ததை நிரூபித்து விட்டால் நான் பொது வாழ்க்கையில் இருந்து விலகி கொள்கிறேன். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வில்லை என்றால் மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெறுவேன் என்று சொல்லவேண்டியது தானே. அப்படி சொல்ல தயாரா? என்று வைகோ சவால் விடுத்துள்ளார்.
மத்திய அரசு அடுத்த கோடைக்குள் கவிழ்ந்து விடும். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டிய அரசு. விரைவில் மக்கள் சக்தியை கொண்டு இந்த ஆட்சியை கவிழ்ப்போம். காரணம் அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம், இந்தியாவை அடமானம் வைத்து விட்டது. அணி சேரா கொள்கை குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. இடது சாரி கட்சிகள் திட்ட வட்டமாக அறிவித்து விட்டது. இடது சாரிகள் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் வாங்குவது 100 சதவீதம் உண்மை. ஆனால் எப்போது வாபஸ் வாங்கலாம் என்று நேரம் பார்த்து வருகிறார்கள் என வைகோ தெரிவித்துள்ளார்.