மதவெறியைத் தூண்டிவிட முயற்சி : கருணாநிதி குற்றச்சாற்று!

Webdunia

செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (18:27 IST)
சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்து நிறுத்த மதவெறியை தூண்டிவிட்டு குழப்பம் விளைவிக்க சில சக்திகள் முயற்சிப்பதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி குற்றம் சாற்றியுள்ளார்!

"இந்து மத பாதுகாப்பு" என்ற போர்வையில் மதவெறியர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் வளம் மிகு வாழ்விற்கும் இருள் திரை போடக்கூடிய பொய்யுறைகளைப் புனைந்து, தங்களின் பழைய ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள பெரிய சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும், அவர்களின் சூது வலையில் அரசியல் கட்சிகளும், அப்பாவி மக்களும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டப் பணிகள் நிறைவேறத் தொடங்கி விரைவில் முழுமை பெற்றுவிடும் சூழ்நிலையில், இந்த திட்டம் நிறைவேறினால் மாநில, மத்திய அரசுகளுக்கு பெரும் புகழ் சேர்ந்துவிடும் என்பதால் அதனை தடுத்து நிறுத்த மத வெறியைத் தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி, வன்முறைச் செயல்களை நடைபெறச் செய்து அதற்கு யார் மீது பழி போடலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள் என்றும், அந்த முயற்சியின் ஒரு கட்டம்தான் "என்னுடைய தலையை வெட்டுபவர்களுக்கும், நாக்கை அறுப்பவர்களுக்கும் எடைக்கு எடை தங்கம் தருவதாகப் பேசியதாகும்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

"இந்தப் பிரச்சனையை பெரிதாக எடுத்துக் கொண்டோமானால் சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஊனம் வந்துவிடக்கூடும். எனவே, அனைவரும் கவனமாக இருந்து மதவெறியர்களின் சூழ்ச்சித் திட்டம் என்னவென்பது பற்றி பொதுமக்களுக்கு விளக்கிட வேண்டும்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்