சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ரூ.12 ஆயிரத்து 500 கோடி செலவில் 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ள இந்த திட்டத்திற்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறையும், பொருளாதார விவகாரங்கள் துறையும் ஒப்புதல் அளித்துள்ளன. இதற்கான நிதி உதவி ஜப்பான் வங்கியிடமிருந்து பெறப்படும் என்று தலைமைச் செயலாளர் திரிபாதி தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் திட்டம் 2 கட்டங்களாக நிறைவேற்றப்படும். முதலில் ஏர்போர்ட் முதல் பழைய வண்ணார்பேட்டை வரை இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு துவங்கி 3 ஆண்டுகளில் அதாவது 2011ல் முடிக்கப்படும் என்றார்.
2-ம் கட்டமாக சென்னை துறைமுகத்தில் தொடங்கி பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாநகர், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்கள் வழியாக கிண்டி வரை செயல்படுத்தப்படும். இவை இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும். இந்த திட்டத்திற்கான முழுமையான திட்ட அறிக்கை அடுத்த மாதம் (அக்டோபர்) 15ஆம் தேதிக்குள் பெறப்பட்டு விடும் என தலைமைச் செயலாளர் திரிபாதி தெரிவித்தார்.