பேருந்து எரிப்பு : ராம பக்தர்களின் பண்பாடு இதுதான் - கருணாநிதி கண்டனம்!
Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (15:29 IST)
தமிழக பேருந்து எரிப்பு சம்பவத்திற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பலியான 2 பேர் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் எல்லையோரத்தில் பேருந்து எரிக்கப்பட்டதில் 2 பேர் பலியாகி இருக்கிறார்களே என்று கேட்டதற்கு, "ராம பக்தர்களின் பண்பாடு இதுதான் என்பதை இதன் மூலமாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை இரு உயிர்களை இழந்த அந்த வீட்டாருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பேருந்தை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை" என்று முதல்வர் கூறினார்.
ராமர் பொறியாளரா என்று நீங்கள் பேசியதை பற்றி பா.ஜ.க.வினரும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் குறையாக சொல்கிறார்களே என்று கேட்டபோது, "ராமர் என்று ஒருவர் இருந்ததாகவோ, அவர் பாலம் கட்டக் கூடிய அளவிற்கு பொறியியல் வல்லுநராக இருந்ததாகவோ, அவர் பாலம் கட்டியதாகவோ சரித்திரம் இல்லை. இருக்கிறதா என்று நீங்களே சொல்லுங்கள், அதைத்தான் நான் பேசினேன். அதிலே என்ன தவறு?
ராமரைப் பற்றி நாங்கள் சொல்லாத விஷயங்களையெல்லாம் ராமாயணம் எழுதிய வால்மீகி அவர்களே ராமாயணத்தில் எழுதியிருக்கிறார். அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்" என்று கருணாநிதி வினா எழுப்பினார் .
ராமர் விஷயத்தை சில பேர் அநாவசியமாக பெரிது படுத்துவதாக நினைக்கிறீர்களா என்று முதல்வர் கருணாநிதியிடம் கேட்டதற்கு, "நிச்சயமாக. சேது சமுத்திரத் திட்டமே வரக்கூடாது என்பது அவர்களுடைய எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக சிறிய சிறிய காரணங்களைத் தேடி அலைகிறார்கள்" என்றார்.