ரயில் மறியல்: வைகோ கைது!
Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (12:31 IST)
சேலம் கோட்டம் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வர மதுரை கோட்டத்தில் இருந்த பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகள் பாலக்காடு கோட்டத்தில் சேர்க்கப்பட்டன. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பாலக்காடு கோட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை இணைக்கப்பட்டதை கண்டித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று காலை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் குவிந்தனர்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து ரயில் நிலையத்துக்கு கொட்டும் மழையில் பேரணி வந்தடைந்தது. அப்போது, பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடுக்கு புறப்பட தயாராக இருந்த பயணிகள் ரயில் முன்பு வைகோ மற்றும் தொண்டர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். பின்னர் மத்திய-மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் இருந்து போத்தனூர் செல்லும் பயணிகள் ரயில் பொள்ளாச்சி வந்தது. அந்த ரயில் முன்பு வைகோ தலைமையில் தொண்டர்கள் மறியல் செய்தனர்.
மறியலில் ஈடுபட்ட வைகோ, பொள்ளாச்சி தொகுதி எம்.பி. கிருஷ்ணன், ரவிச்சந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வீர இளவரசன், சதன் திருமலைக்குமார், கம்பம் ராமகிருஷ்ணன், ஞானதாஸ் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் அவர்களை வேனில் ஏற்றிக் கொண்டிருந்த போது, அப்போது பாலக்காட்டில் இருந்து திண்டுக்கல் செல்லும் ரயில் வந்தது. இதை பார்த்த வைகோ மற்றும் தொண்டர்கள் ரயில் நிலையத்துக்குள் சென்று மீண்டும் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் ரயில்கள் தாமதமாக சென்றன.