கருணை அடிப்படையில் 180 பேருக்கு வேலை நியமன ஆணை: ஸ்டாலின் வழங்கினார்!
Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (17:50 IST)
நகராட்சி நிர்வாகத்துறையில் கருணை அடிப்படையில் 180 பேருக்கு வேலைக்கான நியமன ஆணையை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வேலை நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அந்த தடை நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசுப் பணிகளில் காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதேபோல் பணியில் இருந்தபோது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 6 இளநிலை உதவியாளர், 55 வருவாய் உதவியாளர், 1 தட்டச்சர், 4 ஓட்டுநர், 7 பணி ஆய்வர், 8 மின் கம்பி உதவியாளர் கிரேடு-2, 14 பதிவறை எழுத்தர், 24 துப்புரவு பணி மேற்பார்வையாளர், 2 சங்கிலியாள், 15 அலுவலக உதவியாளர், 12 காவலர், 12 மகப்பேறு ஆயா உள்ளிட்ட 180 பணியிடங்களுக்கான பணி நியமன ஆணையை இன்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நகராட்சிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் அந்தந்த நகராட்சியின் நியமன குழுவின் மூலம் தொடர்ந்து பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஸ்டாலின் கூறினார்.