அனைத்து ஆட்டோக்களும் கேசுக்கு மாற்றம்: மு.க.ஸ்டாலின்!
Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (11:42 IST)
சென்னையில் மாசு ஏற்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து டீசல், பெட்ரோல் ஆட்டோக்களை கேஸ் ஆட்டோவாக மாற்றப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் உள்பட 7 திட்டங்களை துவங்கி வைத்து அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவுத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னால் 6 ஆயிரம் பயணிகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடிந்தது. இப்போது தொடங்கப்பட்டு உள்ள இந்த் திட்டம் மூலமாக 10 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்ய முடியும் என்றார்.
சென்னையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, முதல் கட்டமாக சென்னையில் இயங்கும் 33 ஆயிரம் பெட்ரோல் அல்லது டீசல் ஆட்டோக்களை எரிவாயு மூலம் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டு உள்ளது. இதற்காக அரசு மானியம் மற்றும் கடன் வழங்கும் திட்டத்தின் திரவ எரிவாயு மூலம் இயங்கும் 5 ஆயிரம் புதிய ஆட்டோக்களுக்கு, கடனில்லாமல் மேலும் 5 ஆயிரம் ஆட்டோக்களுக்கு (திரவ எரி வாயு) பெர்மிட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்று அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
கம்ப்யூட்டர் மூலமாக ஓட்டுனர், பழகுனர் உரிமம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.இதன் மூலம் ஓட்டுனரின் திறனை உயர்த்தப்பட்டு விபத்துகளின் எண்ணிக்கை குறையும் என்றார் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.