நிலப் பிரச்சனை : முதல்வரிடம் பேசித் தீர்வு - ராமதாஸ்!
Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2007 (13:40 IST)
மக்கள் விருப்பமின்றி ஒரு சென்ட் நிலத்தைக் கூட எடுக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறிய முதல்வரிடம், கடலூர் நிலப் பிரச்சனையை பேசி நல்ல தீர்வுக்கு முயற்சிப்பேன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உறுதியளித்தார்.
கடலூர் அருகே தனியார் நிறுவனம் 1320 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க, நொச்சிக்காடு, குடிகாடு ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 18 கிராமங்களில் 1,100 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்களின் கருத்தை அறிய பா.ம.க. தலைவர் ராமதாஸ் நேற்று நொச்சிக்காடு கிராமத்திற்கு சென்றார். சம்பந்தப்பட்ட கிராம மக்கள் அங்கு வந்து, எங்கள் நிலங்களை கொடுக்க மாட்டோம் என்று கூறினார்.
அவர்களிடம் ராமதாஸ் பேசுகையில், தமிழ்நாட்டில் வேறு எங்கும் இத்தகைய அற்புதமான கிராமங்கள் இருக்காது. கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை மக்கள் கொடுக்க மாட்டார்கள். சட்டசபையில் பேசிய முதல்வர், ஒரு சென்ட் நிலத்தைக் கூட மக்கள் விருப்பமின்றி எடுக்க மாட்டேன் என்று கூறினார். அவரிடம் பேசி நல்ல தீர்ப்புக்கு முயற்சிப்பேன். அனைவருக்கும் தாயாக இருக்கும் முதல்வர் செய்ய வேண்டிய கடமை இது என்றார்.
மக்கள் கருத்தறியும் கூட்டத்தில் எழுந்த பிரச்சனை தொடர்பாக போடப்பட்ட வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றுர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.