என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது!
Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2007 (14:34 IST)
நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டு விட்டதால் போராட்டத்தை கைவிடுவதாக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பொதுச் செயலாளர் குப்புசாமி அறிவித்துள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் உடனடியாக நிலுவைத் தொகை வழங்க வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 8ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ, காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப்குமார் ஆகியோர் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து என்.எல்.சி. நிறுவன தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் நெய்வேலியில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பொதுச் செயலாளர் குப்புசாமி, தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் சேகர், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோருடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதாக என்.எல்.சி. நிர்வாகம் ஏற்றுக் கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பொதுச் செயலாளர் குப்புசாமி கூறுகையில், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்று தொழிலாளார்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றார்.