6 இடங்களில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி: காவல்துறை ஆணையர்!
Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2007 (17:22 IST)
சென்னை பட்டினப்பாக்கம் சீனுவாசபுரம் கடற்கரை உள்பட 6 இடங்களில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கூறினார்.
வரும் 23ஆம் தேதி இந்து அமைப்புகளை சேர்ந்த குறிப்பாக சிவசேனா (ஜி.ராதாகிருஷ்ணன் குழுவினர்), சிவசேனா (குமாரா ராஜா குழுவினர்), சிவசேனா (ஜி.நாராயணன் குழுவினர்), இந்து முன்னணி (ராமகோபாலன் குழுவினர்), தமிழ்நாடு தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், சென்னை வியாபாரிகள் சங்கம், இந்துமக்கள் கட்சி (எஸ்.வி.ஸ்ரீதரன் குழுவினர்), இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் குழுவினர்), ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி மத்திய கமிட்டி (முரளி குழுவினர்), சூளை வியாபாரிகள் ஸ்ரீ விநாயகா பூஜா குழுவினர், ஸ்ரீ கணேஷ் மஹோட்சவ மண்டல், ஸ்ரீ சக்தி பிளாசா, ஸ்ரீ சின்னா நாயகம் டிரேடர்ஸ் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள் என்று காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
விநாயகர் சிலைகளை கடந்த காலங்களில் கடை பிடிக்கப்பட்டதுபோல 30 வழித்தடங்களில் ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்க 6 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1) பட்டினப்பாக்கம் சீனுவாசபுரம் கடற்கரை
2) காசிமேடு மீன்பிடி துறைமுகம்
3) திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம்
4) திருவொற்றியூர் யுனி வர்சல் கார்போரன்டம் பின்புறம்
5) நீலாங்கரை பல்கலை நகர்
6) எண்ணூர் ராமகிருஷ்ணாநகர் அருகில்
விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு சென்னை நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று ஆணையர் நாஞ்சில் குமரன் கூறினார்.