வாகனங்களில் கறுப்பு கண்ணாடிக்கு தடை: அமைச்சர் தகவல்!
Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2007 (13:00 IST)
குற்றங்களை தடுக்க வாகனங்களில் கறுப்பு கண்ணாடி பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சிலின் உயர் மட்ட குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்த அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லியில் வாகனங்களில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், வாகனங்களில் கறுப்பு கண்ணாடி பயன்படுத்துவதற்கும் கண்ணாடிகளில் கறுப்பு நிற சன் கண்ட்ரோல் பிலிம் ஒட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டு இருப்பதை போல் தமிழ்நாட்டிலும் தடை விதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து இந்த தடை விதிக்கப்படும் என்றார்.
சென்னை குரோம்பேட்டையில் நான்கரை கோடி ரூபாய் செலவில் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அகாடமியை அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே ஓடும் பஸ்களுக்கு இரட்டை வரி விதிப்பு முறையை தவிர்க்க வகை செய்யும் ஒப்பந்தத்தை 20 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களுடன் தமிழக அரசு செய்து கொண்டு உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின் படி, 315 தமிழக பஸ்கள் கர்நாடகத்தில் 61 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லவும், 300 கர்நாடக பஸ்கள் தமிழ்நாட்டில் 59 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை செல்லவும் அனுமதிக்கப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.