கம்யூ. கருத்துக்களை அன்புமணி ஏற்கலாம் : கருணாநிதி!
Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2007 (18:48 IST)
கிராமப்புறங்களில் ஓராண்டு மருத்துவ சேவை பிரச்சினையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கருத்துக்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ஏற்கலாம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்!
கிராம மக்களுக்காகப் பணி புரிகின்ற ஆர்வமும் அக்கறையும் மருத்துவத் துறை மாணவர்களுக்கு வரவேண்டுமென்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை. அதற்காக அவர்கள் ஓராண்டு காலம் மேலும் அதிகமாகப் படிக்க வேண்டும் என்ற கால நீட்டிப்பு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. இந்தப் பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூறியுள்ள கருத்துக்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ஏற்று செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். தனது ஆட்சிக் காலத்தில் நள்ளிரவில் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து கருணாநிதியை கைது செய்தோமே, அதற்குப் பதிலாக தன்னை எப்போது கைது செய்வார்களோ என்ற அச்சத்தில் தினம் தினம் நடுங்கிக் கொண்டு, தொண்டர்களைத் தூண்டிவிட்டு அதிலே குளிர் காய்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவிற்கு நாம் நியாயமாக எழுதும் வார்த்தைகள் கூட பூச்சாண்டி காட்டுவதாகத் தெரியும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
உளவுத்துறை சார்பில் அந்தத் துறையின் அதிகாரி அன்றாடம் காலையில் என்னை சந்தித்து அவ்வளவு விவரங்களையும் நேரடியாக என்னிடம் தெரிவிப்பாரே தவிர, அவர் தகவல்களை அனுப்புகிறார் என்பதும் அதனை இடையில் அமைச்சர்களும் காகஸ் குழுவினரும் மறித்து பிடுங்கி கிடப்பில் போட்டு விடுவதாகவும் ஜெயலலிதா எழுதியதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.