அரசு திட்டங்களை தடுப்பவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டாட்டா தொழிற்சாலையைப் பொறுத்தவரை இந்தியாவிலே நேர்மையாக எவ்வித ஊழலுக்கும் இடமின்றி தொழில் நிறுவனங்களை நடத்துவோர் என்பது தொழில்துறை பற்றி அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். வேறு சிலர் டாட்டா நிறுவனம் முதன் முதலாக இப்போதுதான் தமிழகத்திற்கு வருவதாகச் சொல்கிறார்கள்.
தென் மாவட்டங்கள் முன்னேற வேண்டும், அந்தப் பகுதிகளிலே உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வேண்டும், பொருளாதாரத்திலே அங்குள்ளவர்கள் செழிப்படைய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகின்ற அரசைப் பற்றியும், அரசு செய்கின்ற நல்ல காரியங்களுக்கு குந்தகம் விளைவிக்க எண்ணுவோரைப் பற்றியும், அரசு எந்த நோக்கத்தோடு இந்தத் திட்டத்தைக் கொண்டு வர முயலுகிறது என்பதைப் பற்றியும் அந்தப் பகுதியிலே உள்ள மக்களே சிந்தித்துப் பார்த்து முடிவுக்கு வரட்டும்.
அதே நேரத்தில் அரசின் சார்பில் எந்தக்காரியத்தைத் தொடங்க நினைத்தாலும், அதற்கு ஏதாவது குறை கூறி திட்டங்களை தாமதம் செய்விக்க முயல்வோர் யார் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ளட்டும்.
இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.