சேது சமுத்திரத்தால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லை

Webdunia

செவ்வாய், 31 ஜூலை 2007 (10:49 IST)
சேது சமுத்திர திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. சுற்றுச் சூழலில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை என்று சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சேது சமுத்திர கால்வாயில் எண்ணை கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தினால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு குழுவின் தலைவரும், சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 20 வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தால் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பின்பு குழுத்தலைவர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழுவில் வரலாறு, நிலவியல், கடலியல், விலங்கியல், நுண் உயிரியியல், புவியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த 20 வல்லுனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்றார்.

கடந்த 2 ஆண்டுகளாக கண்காணிப்பு குழு சேது சமுத்திரத் திட்டத்தினால் சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை தொடர்ந்து கண்காணித்து வந்தது. ஆனால் இது வரை சேது சமுத்திர திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. மாற்றமும் உண்டாகவில்லை. அதே போல் அந்த பகுதியில் பவளபாறைகளுக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை. அதே நேரத்தில் கடலில் மீன் வளம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சேது சமுத்திர திட்ட பணிகளை செயல்படுத்துவதற்கு சுற்றுசுழல் கண்காணிப்பு குழு சார்பில் மிகவும் கடினமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி கடலில் தோண்டப்படும் மணல்கள் ஆழம் அதிகம் உள்ள பகுதியில் தான் கொட்ட வேண்டும். அதன்படி குறிப்பிட்ட இடத்தில் தான் மணல்கள் கொட்டப்பட்டு வருகிறது.

சேது சமுத்திர கால்வாயில் எண்ணை கப்பல்கள், ரசாயன கப்பல்கள் செல்ல அனுமதி கிடையாது. ஏனென்றால் இந்த கப்பல்களால் ஏற்படும் சிறிய விபத்துகள் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் உணவு தானியங்கள் ஏற்றி வரும் கப்பல்கள் மட்டுமே கால்வாயில் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் ராமச்சந்திரன் கூறினார்.

சேது சமுத்திர திட்டத்தால் டால்பின், திமிங்கலம் போன்ற மீன்கள் செத்துமடிவதாக கூறப்படுவது ஆதாரமற்ற புகார்கள். டால்பின்கள், நோய் தாக்கி கூட இறக்கலாம். ராமர் பாலம் என்பது இயற்கையானது. இது போன்ற பாலங்கள் அனைத்து கடல்களிலும் உள்ளது என நாசா கூறியுள்ளது. இந்த திட்டத்திற்காக கடலில் உள்ள எதையும் அப்புறப்படுத்த வில்லை, இடிக்கவில்லை. ஆழம் குறைந்த இடம் ஆழப்படுத்தப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்றார் அவர்.

சேது சமுத்திர பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலந்தி பகுதியில் மீன்கள் அதிகளவு கிடைத்து இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மீன்வரத்து குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றும் ராமச்சந்திரன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்