காவிரி பிரச்சினையில் மத்திய அரசு மோசடி: ஜெயலலிதா

Webdunia

வெள்ளி, 13 ஜூலை 2007 (15:28 IST)
காவிரி நீர் பிரச்சனையில் மத்திய அரசு கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 ஆண்டு கால காத்திருத்தலுக்கு பின்பு காவேரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பினை வழங்கியது.

ஏற்றுக் கொள்ளக்கூடிய அம்சங்களை பொறுத்த வரையில் உடனடியாக அந்தத் தீர்ப்பினை அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழகத்திற்கு பாதகமான அம்சங்கள் குறித்து உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அதிமுக தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

நாட்களை வீணாக கழித்துவிட்டு, திரும்பவும் கோடிக்கணக்கான பணத்தை செலவழித்துவிட்டு, தமிழக அரசு எங்கு புறப்பட்டதோ அதே இடத்திற்கு திரும்பவும் வந்து நிற்கின்றது என்றும், இது தான் முதலமைச்சர் கருணாநிதியின் இமாலய சாதனை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் பெரிய ஒரு மோசடி வேலை நடந்து இருப்பதாக கூறியுள்ள ஜெயலலிதா மத்திய அரசு காவேரி நடுவர் மன்றத்தில் மிக ரகசியமாக ஒரு மனுவினை தாக்கல் செய்துள்ளதாகவும், கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்பட்டு தீர்ப்பினை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு குறித்து விளக்கம் கோருகிறோம் என்ற போர்வையில் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்