பிற்படுத்தப்பட்டோரின் நலன் காக்க நாடாளுமன்றக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
நேற்று முன்தினம் சென்னையில் நடந்த சமூக நீதி மாநாட்டில் பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்தை உறுதி செய்ய நாடாளுமன்றக் குழு அமைக்கப்படும் என்று கருணாநிதி உறுதி அளித்தார்.
அதன் அடிப்படையில் அவர் பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்வதில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருகிறது.
இந்த வகுப்பு மக்களி்ன் தேவைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு அளவு சீரான முறையில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
வி.பி.சிங் பிரதமராக இருந்த போது மண்டல ஆணையம் பரிந்துரைகளில் ஒன்றான, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு வேலைகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவில் பெரும்பான்மையாகவும், சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் உயர்கல்வி போதிய இடம் ஒதுக்கீடு அளிக்காமல் மத்திய அரசு வேலைகளில் மட்டும் இட ஒதுக்கீடு அளிப்பதால் அவர்களிடம் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை கொண்டு வர முடியாது.
மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டம், அரசியலமைப்பு சட்டத்தின் படி செல்லுபடியாகாது என்று அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, தற்போது இரண்டுக்கும் மேற்பட்ட நீதபிதிகள் கொண்ட பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இது வழக்கை பெரும் பின்னடைவுக்கு கொண்டு செல்லும்.
இட ஒதுக்கீட்டு கொள்கையில் சட்ட நிர்வாகம் பல்வேறு விதமான விளக்கங்களை கொடுப்பதால், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கொள்கை நிரந்தரமான சட்ட அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. அகில இந்திய அளவில், மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளித்தால் மட்டும் போதாது. இந்த இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களை போல சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
எனவே, இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 338, 338-எ ஆகியவற்றின் கீழ், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டிருப்பதை போல, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் நாடாளுமன்ற குழு அமைக்க இதுவே சரியான தருணம். எனவே ஆலோசனை மீது விரைவாக நடவடிக்கை எடுத்தால், நான் நன்றியுடையவனாக இருப்பேன் என்று கருணாநிதி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.