பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியாவின் 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை மன்ஜித் கெளர், சிறப்பான பயிற்சி பெற அமெரிக்கா செல்கிறார்.
கலிஃபோர்னியாவில் செயல்பட்டுவரும் உலகப் புகழ் பெற்ற வி.எஸ். டிராக் கிளப்பில், அமெரிக்காவின் தலைசிறந்த பயிற்சியாளர்களில் ஒருவரான செட்ரிக் ஹில் வழிகாட்டுதலின் கீழ் மன்ஜித் கெளர் பயிற்சி பெறப் போகிறார்.
இவரை மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அனுப்பி வைக்கவில்லை, ஓமெக்ஸ் லிமிடெட் எனும் தனியார் நிறுவனம் முழுச் செலவையும் ஏற்று மன்ஜித் கெளரை அனுப்பி வைக்கிறது.
இந்நிறுவனத்தின் தலைவர் ரோட்டாஸ் கோயல், பயிற்சி மற்றும் பயணத்திற்கான முழுச் செலவிற்கும் சேர்த்து ரூ.34 லட்சத்திற்கான காசோலையை மன்ஜித்திடம் இன்று அளித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்ற மன்ஜித், மென்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த மன்ஜித், பஞ்சாப் காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றுகிறார். ஷிரோமணி அகாலி தள் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் முயற்சியால் அமெரிக்கா சென்று பயிற்சி பெற அவருக்கு தனியார் நிதியாதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.