ஐ.சி.சி ஒரு நாள் போட்டிகள் தரவரிசையில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி, 3ஆவது இடத்திலிருந்த தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளில் கிரேம் ஸ்மித் 199 ரன்களை விளாசினார். இதனால் அவரது தரவரிசைப் புள்ளிகள் 39 ஆக உயர்ந்தது. இதனால் 2ஆவது இடத்திலிருந்த ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங்கையும் பின்னுக்கு தள்ளி விட்டார் ஸ்மித்.
சி.பி.தொடர் இறுதிப் போட்டிகளில் அபாரமாக விளையாடியதால் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் ஐ.சி.சி தரவரிசையில் முதலிடம் பிடித்தார். ஆனால் அவரது முதலிடம் 2 வாரங்களுக்கே நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஒரு நாள் போட்டி அணித் தலைவர் தோனி 10ஆம் இடத்தில் உள்ளார். யுவ்ராஜ் சிங் 17வது இடத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் மற்றொரு வீரர் ஏ.பி.டிவிலியர்ஸ் 6 இடங்கள் முன்னேறி 9ஆம் இடத்தில் உள்ளார்.
பந்து வீச்சு தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் நெல் 10 இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்திற்கு வந்துள்ளார். இந்திய பந்து வீச்சாளர்களில் ஹர்பஜன் சிங் மட்டுமே 19ஆவது இடத்தில் உள்ளார்.