ஹாக்கி : துணைத் தலைவர் பத்ரா பதவி விலகல் : கில் மௌனம்!
திங்கள், 10 மார்ச் 2008 (15:28 IST)
இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறாததையடுத்து அனைத்திந்திய ஹாக்கி கூட்டமைப்பின் துணைத் தலைவர் நரேந்திர பத்ரா பதவி விலகியுள்ளார். ஆனால் கூட்டமைப்பின் தலைவர் கே.பி.எஸ். கில் இந்திய தோல்வி குறித்து மௌனம் சாதித்து வருகிறார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறாததால் கடும் ஏமாற்றமடைந்து பதவி விலகுவதாக நரேந்திர பத்ரா கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஹாக்கி கூட்டமைப்பை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்றும், இதில் முன்னாள் வீரர்கள் இடம்பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் கே.பி.எஸ். கில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த பத்ரா, தார்மீக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும், ஆனால் அவர் செய்யமாட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் கே.பி.எஸ். கில் இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் பொதுச் செயலர் கே. ஜோதிகுமரன் ஆகியோர் தங்களிடையே கடந்த 6- 7 மாதங்களாக பேசிக்கொள்வதில்லை என்றும் கூறினார்.
ஆனால் பயிற்சியாளர் ஜோகின் கர்வாலோ ஒரு சமரசத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர் என்றும், இந்திய அணியின் இந்த தோல்விக்கு அவரும் ஒரு காரணம் என்றார்.
மேலும் வீரர்களைத் தான் ஒரு போதும் குறை கூறமாட்டேன் என்று கூறிய பத்ரா, வீரர்கள் தங்கள் உடைகளை தாங்களே துவைக்க வேண்டிய அவல நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு படிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்றும் கடுமையாக சாடியுள்ளார்.