கிராமப்புற விளையாட்டுக்களை ஊக்குவிக்க புதிய திட்டம்!
சனி, 8 மார்ச் 2008 (16:05 IST)
கிராமப்புற விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையிலான புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
'பஞ்சாயத்து யுவா கிரிடா அவுர் கேல் அபிஹியான்' எனப்படும் இத்திட்டத்திற்காக 11 வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு ரூ.5 லட்சமும், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் ரூ.1 லட்சமும் வழங்கப்பட உள்ளது. இதுதவிர, ஆண்டு நிதியாக ரூ.10 ஆயிரமும், ஆண்டு செயல் நிதியாக ரூ.12 ஆயிரமும் கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படுகிறது. பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு ஆண்டு நிதியாக ரூ.20 ஆயிரமும், ஆண்டு செயல் நிதியாக ரூ.24 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
போட்டிகள் நடத்துவதற்காக ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.3 லட்சமும், பஞ்சாயத்து ஒன்றியத்திற்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.
அடிப்படை விளையாட்டு போட்டிகளையும், அதற்கேற்ற சூழலையும் கிராமப்புறங்களில் ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாநில அரசு, பஞ்சாயத்து, கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மேம்பாட்டு கழகங்கள், இளைஞர் சங்கங்கள் ஆகியவற்றின் உதவியுடன் போதிய இடவசதியுள்ள பகுதிகளில் போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று கிராமப்புற விளையாட்டுக்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் அப்பகுதியினரின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணர முடியும். கிராமப்புற பொருளாதாரத்தையும் ஊக்கப்படுத்தும் முயற்சியாக இத்திட்டம் அமையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.