பெங்களுர் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் உலக டென்னிஸ் தர வரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜெலினா ஜான்கோவிச் பங்கேற்கிறார்.
பெங்களூருவில் மார்ச் 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பெங்களுர் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க அமெரிக்காவை சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ், சுவிட்சர்லாந்தை சேர்ந்த பட்டி ஸ்குனிடர், ஹங்கேரியை சேர்ந்த ஏஜென்ஸ் ஸ்சவாய் ஆகிய முன்னணி ஆட்டக்காரர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆட்டத்திற்கு மேலும் விறுவிறுப்பும், கடும் போட்டியையும் ஏற்படுத்தும் வகையில் செர்பியாவை சேர்ந்த 22 வயதான ஜெலினா ஜான்கோவிச்சும் பங்கேற்க உள்ளார். இவர் 2006-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன், 2007-ல் நடந்த பிரெஞ்ச் ஒபன், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் ஆகிய போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
"ஜான்கோவிச் எதிர் ஆட்டக்காரருக்கு கடும் நெருக்கடி கொடுக்கக்கூடிய வீராங்கனை" என்று போட்டிக்கான இயக்குநரும், கர்நாடக மாநில லான் டென்னிஸ் சங்க செயாலாளருமான சுந்தர் ராஜு பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
ஜான்கோவிச் கூறுகையில், "இந்தியாவில் முதல்முறையாக நடைபெற உள்ள டியர்-2 டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். டென்னிஸ் விளையாட்டை நேசிக்கும் ரசிகர்கள் மத்தியில் கடினமான போட்டியை எதிர்கொள்ள உள்ளேன்" என்றார்.
இவர் விம்பிள்டன்-2007 கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.