சைமன் டாஃபல் விலக முடிவு?

செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (15:41 IST)
ஐ.சி.சி நடுவர் சைமன் டாஃபல் நடுவர் பொறுப்பிலிருந்து விலக பரிசீலித்து வருவதாக ஆஸ்ட்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது சர்வதேச கிரிக்கெட் பேரவையுடனான அவரது ஒப்பந்தம் மார்ச் 31ம் தேதி முடிவடைகிறது. ஆனால் ஒப்பந்தத்தை நீட்டிப்பது பற்றி உறுதியாக எதுவும் கூற முடியாது என்று டெய்லி டெலிகிராஃப் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 31ற்கு பிறகு தான் திறந்த சந்தைக்கு வந்து விடுவதாக சூசகம் காட்டிய அவர், எப்போதும் புதிய வாய்ப்புகளை தான் நாடுவதாகவும், அது குறிப்பாக நடுவர் பணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஐ.சி.சி டெஸ்ட் நடுவர்களுக்கு சொந்த நாட்டில் நடுவர் பணியாற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் குடும்பத்தை பிரிந்து நீண்ட நாட்களுக்கு அயல் நாடுகளில் வாழ வேண்டியுள்ளது என்று கூறியுள்ள சைமன் டாஃபல் இது வரை 49 டெஸ்ட்களிலும் 118 ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் பணியாற்றியுள்ளார்.

மேலும் ஐ.சி.சி.யில் நடுவர்களுக்கு பயிற்சி அளவில் ஆதரவு அளிப்பது போன்ற பணிகளும் உள்ளது என்றார்.

ஷேன் பாண்ட், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று பண மழை கொட்டும் இந்தியன் கிரிக்கெட் லீக் மற்றும் இந்திய பிரிமியர் லீக் தொடர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள்னர், அதுபோன்று சைமன் டாஃபலும் சிந்திப்பதாக தெரிகிறது.

தனது ஐ.பி.எல் வாய்ப்பு பற்றி அவர் வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார். அதாவது அதுவும் ஒரு சாத்தியம்தான் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே நடுவர்கள் பிரச்சனையால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வரும் ஐசிசி-க்கு டாஃபலும் விலகிவிட்டார் என்றால் அது ஒரு பெரிய தலைவலியாகத்தான் போய் முடியும்.

தனது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சைமன் டாஃபல் இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்