ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு கும்ளே தொடர்ந்து தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனார்.
டிசம்பர் மாத இறுதியில் இந்திய அணி, ஆஸ்ட்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த அணிக்கு தலைவராக கும்ளே நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரில் நேற்று நடந்த இந்திய அணியின் தேர்வு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆஸ்ட்ரேலிய தொடருக்கு 24 பேர் கொண்ட உத்தேச அணி மட்டுமே நேற்று தேர்வு செய்யப்பட்டது. 16 பேர் கொண்ட இறுதி அணி வருகிற 12ஆம் தேதி வெங்களூரில் அறிவிக்கப்படுகிறது. உத்தேச அணியில் ஷேவாக்குக்கு இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஆகாஷ் சோப்ரா, பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
வரும் 17ஆம் தேதி இந்திய அணி ஆஸ்ட்ரேலியா செல்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் தேதி மெல்போர்னில் துவங்குகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 8ஆம் தேதி பெங்களூரில் துவங்குகிறது. இந்த போட்டியில் ஜாகீர்கான், முன்னாப்பட்டேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக இர்பான் பதான், இஷாந்த் ஷர்மா, வி.ஆர்.வி.சிங் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.