இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து டிசம்பர் 1 ஆம் தேதி கொல்காட்டாவில் நடைபெறவுள்ள வாரியத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் ராஜூ சுக்லா கூறியுள்ளார்!
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரெக் சாப்பல் விலகியதற்குப் பிறகு, மேலாளருடனும், பந்து வீச்சு, ஃபீல்டிங் பயிற்சியாளர்களுடன் இந்திய அணி ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது.
ஆயினும், அணிக்கு பயிற்சியாளரை நியமனம் செய்வதில் உறுதியாக உள்ள கிரிக்கெட் வாரியம், தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கேரி கிறிஸ்டன், ஆஸ்ட்ரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் புக்கானன் ஆகியோரின் பெயர்களை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
கேரி கிறிஸ்டன் இன்று கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் ஆகியோரால் இன்று நேர்காணல் செய்யப்பட்டார். அநேகமாக அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், பி.டி.ஐ. செய்தியாளரிடம் பேசியுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவர் ராஜூ சுக்லா, புதிய பயிற்சியாளரை நியமிப்பது குறித்து கொல்கட்டாவில் டிசம்பர் 1 ஆம் தேதி கூடும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.