கடும் விமர்சனத்துக்குள்ளான யுவ்ராஜ் நீக்கம்!

வியாழன், 22 நவம்பர் 2007 (12:57 IST)
இந்திய டெஸ்ட் அணியில் யுவ்ராஜ் சிங் இடம்பெறாதது குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

உலகில் தற்போது சிறந்த இடது கை பேட்ஸ்மெனாக திகழும் யுவ்ராஜ் சிங்கை டெஸ்ட் போட்டியில் தேர்வு செய்யாமல் இருப்பது அணி நிர்வாகத்தின் அபத்தமான போக்கையே காட்டுகிறது என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

இருபதுக்கு 20 உலகக் கோப்பை, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடர்களில் அபாரமாக ஆடியது ஆகிய அனைத்தும் அவரை டெஸ்ட் போட்டிக்கு தகுதி பெறாமல் செய்து விட்டதோ என்னவோ என்று ஏளனமாகக் கேட்டுள்ள, தேர்வாளர்களின் கோழைத்தனம் இது என்று சாடியுள்ளார்.

யுவ்ராஜ் சிங்கை ஒரு நாள் போட்டிகளுக்கான வீரர் என்று முத்திரை குத்துவது மடத்தனம் என்று அவர் மேலும் கடுமையாக சாடியுள்ளார்.

ஆனால் முன்னாள் பாகிஸ்தான் வீரரும் தற்போதைய தொலைக்காட்சி வர்ணனையாளருமான வக்கார் யூனிஸ் இது பற்றிக் கூறுகையில், ஏகப்பட்ட மூத்த வீரர்கள் அணியில் இருப்பது தேர்வாளர்களுக்குமே பிரச்சனைதான், தேர்வாளர்கள் மேல் கருணை காட்டவேண்டும் என்று கூறியதோடு, யுவ்ராஜ் சிங் நிலை துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

யுவ்ராஜ் வேறு என்னதான் செய்வது தொடர்ந்து ரன்களை எடுப்பதைத்தவிர? டெஸ்டில் இடம்பெற வேகப்பந்து அல்லது சுழற்பந்து வீச்சு ஆகியவற்றில் அவர் நிபுணத்துவம் பெற முயற்சி செய்யவேண்டியதுதான் என்றே தோன்றுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்