டெல்லியில் நாளை தொடங்கும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆர்.பி.சிங், சிறிசாந்த் காயம் காரணமாக இடம்பெற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் போட்டித்தொடர் முடிவடைந்து டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இரண்டு போட்டி கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நாளை டெல்லியில் தொடங்குகிறது.
இதையடுத்து இந்திய அணி வீரர்கள் நேற்று டெல்லியின் பெரெஷோ கோட்லா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், சிறிசாந்த் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இருவருமே முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்று கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பதிலாக முனாப் பட்டேல், நிசாத் சர்மா சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் விக்கெட் கீப்பர் தோனிக்கு ஏற்பட்ட காயம் வேகமாக குணமாகி வருவதாக கூறப்படுகிறது. அவர் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். முன்னாள் அணித் தலைவர் கங்குலி, லட்சுமண் ஆகிய மூத்த வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அணித் தலைவர் அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் நேற்று பந்து வீசி பயிற்சியில் ஈடுபட்டனர். கும்ளே அணித் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1999ஆம் ஆண்டு இதே மைதானத்தில் அனில் கும்ளே பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.