இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தனது உல்கச் சாதனையை ஆஸ்ட்ரேலிய மண்ணில் முறியடிக்க முடியாமல் செய்ததற்காக ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்ட்ரேலிய வீரர்களுக்கு ஷேன் வார்ன் நன்றி தெரிவித்துள்ளார்.
எப்படியிருந்தாலும் முரளிதரன் தனது சாதனையை முறியடித்து விடுவார் என்று கூறிய வார்ன், ஆஸ்ட்ரேலிய அணியின் சிறப்பான ஆட்டத்தினால் உலகச் சாதனையை தான் இன்னமும் 2 வாரங்களுக்கு தக்க வைக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது என்று ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
9 விக்கெட்டுகள் எடுத்தால் ஷேன் வார்னின் 708 விக்கெட்டுகள் உலக சாதனையை முறியடிக்கும் நோக்கத்தோடு முரளிதரன் ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் அவரால் 4 விக்கெட்டுகளையே வீழ்த்த முடிந்தது.
2 டெஸ்ட்களிலும் சேர்த்து ஆயிரம் ரன்களுக்கும் மேல் குவித்த ஆஸ்ட்ரேலிய அணியின் 11 விக்கெட்டுகளை மட்டுமே இலங்கை வீழ்த்த முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் முரளிதரன் பந்து வீச்சை சிறப்பாக ஆடியதால் தனது உலக சாதனை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கும் என்று நன்றி கூறிய ஷேன் வார்ன், முரளிதரன் 1000 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று கூறினார்.