அட்டப்பட்டு ஓய்வு பெற்றார்

செவ்வாய், 20 நவம்பர் 2007 (12:47 IST)
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மர்வான் அட்டப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஹோபார்ட்டில் இன்று முடிந்த 2வது இறுதி டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளைக்கு முன் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி திலிப் மென்டிசிற்கு தனது ஓய்வுக் கடிதத்தை அனுப்பினார் அட்டப்பட்டு.

முதல் டெஸ்டின் போது இலங்கை அணித் தேர்வுக் குழு மீது கடும் விமர்சனத்தை தெரிவித்தார் அட்டப்பட்டு, இதற்காக நாடு திரும்பியவுடன் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அட்டப்பட்டு திடீரென ஓய்வு அறிவித்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தியு‌ள்ளது. ஆனால் அவர் இந்திய கிரிக்கெட் லீகில் டெல்லி ஜெட்ஸ் அணிக்கு தலைமைப் பொறுப்பு ஏற்று விளையாடப்போவதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அட்டப்பட்டு ஓய்வு அறிவித்துள்ளது குறித்து கருத்து கூறிய இலங்கை அணித் தலைவர் மஹேலா ஜெயவர்தனே, இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும் இது ஒரு சோகமான தருணம் என்றும் கூறியுள்ளார்.

தனது 90வது டெ‌ஸ்ட் போட்டியை ஆடியுள்ள அட்டப்பட்டு 5502 ரன்களை 39.02 என்ற சராசரியுடன் எடுத்துள்ளார். இதில் 6 இரட்டை சதங்கள், 16 சதங்கள், 17 அரை சதங்கள் அடங்கும். 1990- 91 ஆம் ஆண்டில் அட்டப்பட்டு தனது முதல் சர்வதேச கிரிக்கெட்டை ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்