இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த போது புவனேஷ்வர் விமான நிலையத்தில் ஒருவர் தன்னை தாக்கியது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எதையும் எடுக்காததோடு, அந்த விஷயத்தை மூடிமறைக்கவும் செய்தது என்று கிரெக் சாப்பல் குற்றம்சாற்றியுள்ளார்.
அடுத்த வாரம் திரையிடப்படவுள்ள ஏபிசி ஆவணப்படம் ஒன்றில் அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
நிறவெறியே காரணம்!
ஒரிசாவிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு எந்த வீரரையும் சேர்க்காததுதான் தாக்குதல் நடத்தக் காரணம் என்று கூறப்படுவதை மறுத்துள்ள கிரேக் சாப்பல், இந்திய வீரர்களையோ, அணித் தேர்வாளர்களையோ தாக்காமல் தன்னை தாக்கியதற்கு நிறவெறியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
“இந்திய கிரிக்கெட் வீரர் யாராவது ஒருவர் இவ்வாறு தாக்கப்பட்டிருந்தால் அதன் மீது கண்டனங்கள் எழுந்திருக்கும். ஆனால் தாக்கப்பட்டது நான் என்பதால் யாரும் அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை” என்று அவர் இந்திய வாரிய அதிகாரிகளையும் ஊடகங்களையும் நேரடியாக குற்றம்சாட்டினார்.
தன்னை அந்த நபர் தாக்கியதில் தன்னுடைய சூட்கேஸ் உதவியினால் கீழே விழாமல் தப்பித்தேன் என்று கூறிய சாப்பல், இது குறித்து பிசிசிஐ அதிகாரி தன்னிடத்தில் தொலைபேசியில் கேட்டபோது, இந்த சம்பவம் நடந்ததா என்ன? என்று கேட்டதாகக் கூறியுள்ளார்.
இந்திய அணியில் இளம் வீரர்களை கொண்டு வரவேண்டும் என்ற தனது முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போடும் விதமாக சவ்ரவ் கங்குலியை மீண்டும் அணியில் எடுத்ததாகக் கூறியுள்ள சாப்பல், அப்போதே தான் பயிற்சியாளர் பொறுப்பை உதறியிருக்க முடியும், அதுவே சிறந்த முடிவாக கூட அமைந்திருக்கும். ஆனால் அப்போது நான் பொறுமை காத்தேன் என்று கூறியுள்ளார்.