அட்டப்பட்டு மீது நடவடிக்கை ஒத்திவைப்பு

Webdunia

செவ்வாய், 13 நவம்பர் 2007 (12:12 IST)
இலங்கை கிரிக்கெட் வாரிய அணித் தேர்வுக்குழுவை பொம்மைகள் என்றும் அதன் தலைவர் ஒரு ஜோக்கர் என்றும் வர்ணித்த சர்ச்சையில் மர்வான் அட்டப்பட்டு மீது ஒழுங்கு நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நேற்று முடிந்த பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்ட முடிவில் மர்வான் அட்டப்பட்டு இலங்கை அணித் தேர்வுக்குழு மீது கடும் தாக்குதல் தொடுத்தார். அதாவது இளம் வீரர்களை இது நாள் வரை தயார் செய்யாமல், ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான கடினமான தொடரில் 37- 38 வயது ஆன வீரர்களை ஆடச் செய்வது பற்றி கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

தேர்வாளர்கள் சுற்றுப்பயணம் செய்து கொண்டு அதற்கு உரிய தொகையையும் பெற்றுக் கொண்டிருப்பது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று அவர் கண்டித்துள்ளார்.

அட்டப்பட்டுவின் இந்த ஆக்ரோஷமான தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், அட்டப்பட்டுவின் பேச்சு பெருத்த ஏமாற்றத்தையும் மனச் சோர்வையும் அளிக்கிறது என்றும் ஆஸ்ட்ரேலிய தொடருக்கு அட்டப்பட்டு தொடர்வார், ஆனால் தொடர் முடிந்து இலங்கை வந்தவுடன் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

அட்டப்பட்டுவிற்கு அணித் தலைவர் ஜெயவர்தனே மற்றும் பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா கூறுகையில், அட்டப்பட்டு பேசாமல் இருப்பது நல்லது என்றும் தனது ஆட்டத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்