பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி மும்பையில் நாளை (புதன்கிழமை) தேர்வு செய்து அறிவிக்கப்படுகிறது. புதிய அணித் தலைவர் கும்ளே அணி தேர்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனை இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிந்ததும் ஆஸ்ட்ரேலியா அணியுடன் 4 டெஸ்டில் விளையாடுகிறது. இதை தொடர்ந்து ஆஸ்ட்ரேலியாவுடன் ஒரு 20 ஓவர் போட்டி, அடுத்து இந்தியா, இலங்கை, ஆஸ்ட்ரேலியா ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது. 20 ஓவர் போட்டி மெல்போர்னில் பிப்ரவரி 1ஆம் தேதி நடக்கிறது. 3 நாடுகள் போட்டி பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடக்கிறது.
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிக்கான அணி தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணத்தில் விளையாட இருக்கும் 4 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும், 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன்பும் தேர்வு செய்து அறிவிக்கப்படும். அணி தேர்வில் காலதாமதம் செய்யப்படமாட்டாது.
போட்டி நடைபெறும் நாளில் அணி தேர்வு இருக்காது. ஏனெனில் அந்த நாள் ஆட்டத்தில் தேர்வாளர்கள் கவனம் செலுத்த கடினமாக இருக்கும் என்று நிரஞ்சன் ஷா கூறினார்.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் சரத்பவார் தலைமையில் டெல்லியில் இன்று (13ஆம் தேதி) நடக்கிறது. இதில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.