''டெஸ்ட் அணித் தலைவர் பொறுப்பை தோனிக்கு வழங்கக்கூடாது''என்று ரவிசாஸ்திரி, சேப்பல் ஆகியோர் கூறியுள்ளர்.
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணித் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து தெண்டுல்கர் திடீரென விலகியதால், அந்த பொறுப்புக்கு தோனியே அதிக வாய்ப்பு உள்ளது. ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டிகளில் தோனி தனது பணியை சிறப்புடன் செய்து வருகிறார் என்று தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவர் நேற்று தெரிவித்தார். ஆனால் தோனி டெஸ்ட் அணித் தலைவர் பதவியை ஏற்க இது சரியான நேரம் கிடையாது என்று முன்னாள் பிரபலங்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் ரவி சாஸ்திரி கூறுகையில், டெஸ்ட் அணித் தலைவர் பொறுப்பை தோனிக்கு கொடுத்தால் அவரை நிறைய நெருக்கடிக்குள்ளாக்கும். எதிர்காலத்தில் இந்த பொறுப்பை அவர் சிறப்பாக செய்யலாம். ஆனால் இப்போது அதற்கு சரியான நேரம் கிடையாது. இப்போது அவர் டெஸ்ட் அணித் தலைவர் பொறுப்பை சுமக்கும் அளவுக்கு தயாராகவில்லை என்று நான் நினைக்கிறேன். எனவே அவருக்கு அந்த பொறுப்பை தரக்கூடாது என்றார்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூறுகையில், இப்போது தான் தோனி ஒரு நாள் போட்டி தலைவராக பயிற்சி பெற்று வருகிறார். ஆனால் டெஸ்ட் அணித் தலைவர் பதவிக்கு அவர் இன்னும் தயாராகவில்லை. ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணம் முடியும் போது தோனி நல்ல கிரிக்கெட் வீரராகவும், திறமைவாய்ந்த அணித்தலைவராகவும் மாறுவார் என்றார்.