அணித் தலைவர் பொறுப்பு : சச்சின் ஏற்க மறுப்பு!

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (20:14 IST)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பை ஏற்க முன்னணி வீரர் சச்சின் டெண்டுல்கர் மறுத்துவிட்டார் என்று கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது!

இந்திய ஒரு நாள் அணிக்கு மகேந்திர சிங் தோனி தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து, இந்திய டெஸ்ட் அணிக்கு தலைவர் தேர்வு செய்வது குறித்து கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஆலோசனை செய்து வந்த நிலையில், டெஸ்ட் அணியின் பொறுப்பையும், அணியின் இளைய வீரர் ஒருவருக்கு அளிக்குமாறு சச்சின் ஆலோசனை தெரிவித்துள்ளதாக கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

தனது முடிவை கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவாரிடம் சச்சின் தெரிவித்துள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வாரியச் செயலர் நிரஞ்சன் ஷா கூறியுள்ளார்.

தற்பொழுது இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருவதாகவும், இந்த நிலையில் ஒரு இளம் வீரரை அணியின் தலைமைப் பொறுப்பிற்கு நியமிப்பது எதிர்கால அணியை உருவாக்குவதற்கு உதவிடும் என்று சச்சின் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

தனது கருத்தை வாய்மொழியாகவே சச்சின் தெரிவித்துள்ளதாகவும், கடிதம் ஏதும் எழுதவில்லை என்றும் நிரஞ்சன் ஷா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்