பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னாள் அணித் தலைவர் ராகுல் திராவிட் நீக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. முன்னாள் வீரர்கள் பலர் திராவிட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறுகையில், அணயில் இருந்து திராவிட் நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. 4 போட்டிகளில் ஆடாததை வைத்து ஆட்டத் திறனை கணக்கிட கூடாது. 2 ஆட்டத்தில் அவர் 40 ஓவரிக்கு மேல் தான் விளையாட வந்தார். அப்போது அதிக ரன் எடுக்க வேண்டும் என்று நினைப்பது கடினம் என்றார்.
கங்குலி நீக்கப்பட்ட போது இளம் வீரர்களை கொண்டு வருவதாக சொன்னார்கள். ஆனால் ஒரு ஆண்டில் அவர் அணிக்கு மீண்டும் திரும்ப அழைக்கப்பட்டார். திராவிட் விஷயத்திலும் இதுமாதிரிதான் நடக்கும். அவரை விரைவில் அணியில் சேர்க்க வேண்டும் என்று ஜடேஜா கேட்டுக் கொண்டார்.
தேர்வு குழுவினரின் செயல்கள் அனைவரையும் முட்டாள்களாக்குவதாக இருக்கிறது. தேர்வு குழுவினர் கோமாளிகள் என்று ஜிம்மி அமர்நாத் சொன்னது சரிதான் என ஜடேஜா குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜீத்வடேகர் கூறுகையில், திராவிட்டை அணியில் இருந்து நீக்கியது தவறு. அவருக்கு நிகரான வீரர் இல்லை. அவருக்கு ஓய்வு கொடுக்க இருப்பதை முன் கூட்டியே தேர்வு குழுவினர் தெரிவித்திருக்க வேண்டும். சிறந்த வீரரான அவரை நல்ல முறையில் நடத்துவது அவசியம் என்றார்.
மேலும் பிஷன்சிங்பெடி, மதன்லால், கிரண்மோரே, சந்தீப்பட்டீல், சஞ்சய் மஞ்ரேக்கர் ஆகியோர் திராவிட் நீக்கத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.