பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் ராகுல் திராவிட் மறுத்து விட்டார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற மராத்தன் ஓட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்கள், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேட்டபோது, இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன என்று மட்டுமே திராவிட் பதில் அளித்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்திப்பதை திராவிட் தவிர்த்தார். இதனிடையே ஒருநாள் போட்டிக்கான அணியிலிருந்து திராவிட் நீக்கப்பட்டது தேர்வாளர்களின் ஒருமித்த முடிவு என்று மூத்த வீரர்கள் உடல் தகுதி பெற வசதியாக ஓய்வளிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடனான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் எஞ்சிய போட்டிகளில் திராவிடுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர் வரும் காலங்களில் டெண்டுல்கர், கங்குலி ஆகியோருக்கும் இதுபோன்ற இடைவேளை அளிக்கப்படலாம் என்று கூறிய அவர் அணியில் ஒரு நேரத்தில் இடம் பெற்றால் போதும் என்றும், ஒருவருக்கு ஓய்வளிக்கலாம் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே திராவிட் அணியில் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.