பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கான வீரர்கள், தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தேர்வுக்குழு தலைவர் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிராக ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் முன்னாள் அணித் தலைவர் ராகுல் திராவிட் இடம்பெறவில்லை. திராவிட்டை அணியிலிருந்து நீக்கியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள் பலர் திராவிட் நீக்கத்தை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் வெங்சர்க்கார் தமது முடிவு சரியானதே என்று கூறியுள்ளார்.
இந்திய அணி தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறிய அவர், எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
எந்த அணியை தேர்வு செய்தாலும் யாராவது ஒருவரை விட்டு விட்டதாக விமர்சனம் எழவே செய்யும் என்று கூறியுள்ள அவர், தேர்வுக்குழுவினர் இதுகுறித்து எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மூத்த வீரரான திராவிட்டை தேர்வு செய்யாதது வருத்தம் தரவில்லையா என்று கேட்டப்பட்ட போது, மூத்த வீரர், இளம் வீரர் என்ற கேள்விக்கெல்லாம் இடமில்லை என்று அவர் பதிலளித்தார். தகுதியின் அடிப்படையிலேயே வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாக அவர் கூறினார்.