ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் இந்தியா தோல்வியை தழுவும் என்று ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் கிளார்க் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்ட்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் கிளார்க், இந்த தொடரில் இந்தியா அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியை தழுவும் என்று கூறியுள்ளார்.
அதற்கு முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான நடைபெற உள்ள தொடரிலும் ஆஸ்ட்ரேலியா வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த 2 தொடர்களிலும் ஆஸ்ட்ரேலியா அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என அவர் கூறியுள்ளார்.
இளம் பந்து வீச்சாளரான கிளார்க், முன்னாள் ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தை போல வரக்கூடியவர் என்று கருதப்படுகிறார்.
மெக்ராத் விளையாடிய காலத்தில் ஒரு தொடருக்கு முன்பாக இப்படித்தான் எதிரணியினர் பற்றி அதிரடியாக கருத்துக்களை வெளியிடுவார். தற்போது கிளார்க்கும் அதே போல இந்திய அணிக்கு எதிராக தனது கணிப்பை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.