ஐசிசிக்கு எதிராக நிறப் பாகுபாடு புகார் அளித்திருந்த ஆஸ்ட்ரேலிய நடுவர் டேரல் ஹேர் அந்த புகாரை நிபனந்தனையற்று திரும்பப் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, டேரல் ஹேர் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஓவலில் பாகிஸ்தான் அணியினர் பந்தை சேதம் செய்ததாக குற்றம்சாட்டிய டேரல் ஹேர், குற்றச்சாட்டை ஏற்காத பாகிஸ்தான் அணியினர் விளையாட மறுத்ததால் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவித்தையடுத்து கடும் சர்ச்சை எழுந்தது. அதன் பிறகு நடந்த விசாரணையில் டேரல் ஹேர் மீது புகார் கூறப்பட்டு அவர் ஐசிசி உயர்மட்ட நடுவர் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து புகார் செய்த டேரல் ஹேர், தன்னுடன் அன்று ஓவல் டெஸ்டில் பணியாற்றிய மேற்கிந்திய தீவுகள் நடுவர் பில்லி டாக்ட்ரோவ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது, தன் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது ஐசிசி அதிகாரிகளின் நிறப் பாகுபாட்டுணர்வையே காண்பிக்கிறது என்று புகார் பதிவு செய்தார்.
இது குறித்து லண்டன் வேலை வாய்ப்பு தீர்ப்பாயத்தில் கடந்த சில நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐசிசிக்கு எதிரான புகார்களை வாபஸ் பெறுவதாக டேரல் ஹேர் தெரிவித்துள்ளார்.
தற்போது டேரல் ஹேர் ஐசிசி மறுசீரமைப்பு நிர்வாகக் குழுவுடன் 6 மாதங்கள் பணியாற்றுவார். அதன் பிறகு ஐசிசி கூடி டேரல் ஹேர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றுவது பற்றி முடிவு செய்யும்.